contact

Sunday, 20 December 2009

பொய் கோபம்



எல்லோர் கேள்விகளுக்கும்
பதிலளிக்கும் நான்
பதிலிருந்தும் மௌனிக்கிறேன்
உன்னிடம் மட்டும்
எல்லாம் தெரிந்திருந்தும்
ஏனோ
தினமும் கேட்கிறாய் "ஏன் தாமதம்?"
ஒவ்வொரு நாள் முன்னிரவு நேரங்களில்
இப்படித்தான் ஆகின்றது
என் மேல் உன் அக்கறையின் 
வெளிப்பாடாய் உன் பொய் கோபம்
என்னை ஊமையாக்குது!

Tuesday, 1 December 2009

அடங்காமலே மனம்


அடங்காமலே மனம்
அடாவடி செய்யுதடி
அருகில் நீ இல்லையென அறிந்திருந்தும்
பார்க்கும் பெண்களில்
பாவை உன்னை தேடுதடி
பகலிரவை மறந்து
பழைய நினைவுகளில் முழ்குதடி
என்னதான் செய்தாலும்
என் பேச்சை கேட்க மறுக்குதடி
நான் சொல்வதை செய்ய சொல்லி
நீயாவது சொல்லடி
என் மனதிடம்

Saturday, 28 November 2009

சுகம்


காதலில்
காத்திருப்பதும் சுகமாம்
காத்திருந்த எனக்கல்லவா தெரியும்
என் இதயத்தின்
ஒவ்வொரு துடிப்பும் - உனக்காக
நான் வாசித்த
வரவேற்பு இசை என்று
விழிகள் துவண்டுவிட்டன
வழி பார்த்து பார்த்து
விரல்கள் எல்லாம் அழுகின்றன - நீ
வராத நேரத்தில்
நகத்தோடு விரல்களையும் கடித்ததால்
யார் யாரோ
நண்பர்களாகிபோனார்கள்
உனக்காக காத்திருந்த நேரத்தில்
இத்தனை சோகங்கள்
உனக்காக - உன்
வரவுக்காக காத்திருக்கையில்
ஆனாலும்
அத்தனையும் மறந்துவிடுகிறது
புல்லின் நுனியில் படுத்துறங்கும் பனித்துளி போல
காதலில் காத்திருப்பதும் சுகம்தான்!

Thursday, 26 November 2009

காதல் தோல்வி




கிஞ்சித்தும்
கலையா உன்
மௌன புகைமூட்டத்தின் நடுவே
ஓர் மெல்லிய புன்னகை
ஒளிக்கிற்று
தோன்றியபோது நான்
அறியேன் - அது
என் அந்திமகாலத்தின்
ஆரம்பமென்று
கடைக்கண் பார்வையால்
என் கண் வழியே
இதயத்துள் இடம் பிடித்து
இதயத்தின் தந்திக்கம்பிகளை
நீ மீட்ட தொடங்கியபோது
தெரியாது எனக்கு
அது என் வாழ்வின்
சோக கீதமென்று
ஒவ்வொரு முறையும்
எனை கடந்து செல்கையில் 
குளிரிளம் தென்றலாய்
தழுவி சென்றபோது
நான்
அறியவில்லை பெண்ணே அது
ஊழி காத்துக்கு
கட்டியம் கூறும் சாரலென்று
மெல்லிய புன்சிரிப்பையும்
கயல் விழிகளின்
காதல் மொழிகளையும்
கண்டு - உன்
முகவிலாசங்களில் மூழ்கிவிட்ட
நான்
எதிர்பார்க்கவில்லை என் வாழ்வின்
அஸ்தமனத்திற்கு
அதிக தூரமில்லை என்று
கடற்கரை மணல் மீது
காதல் மொழி பேசி
கடல் நீரில் கால் நனைத்தபோது
அலைகளின் அழுகை
எனக்காகதான் என்பதை
அறியாமல் போனேன் பெண்ணே !

Wednesday, 25 November 2009

தனிமை




தனிமை இனிக்கவில்லை
உன்னைதவிர எதிலும் கவனம்
நிலைக்கவில்லை
ஊண் உறக்கம் எதையும்
உள்ளம் கேட்கவில்லை
உன் குரல் கேட்க
உன் முகம் நோக்க
உன்னை ஸ்பரிசித்து உயிர்தெழ
காத்திருக்கின்றன ஐம்புலன்களும்
உன்னை பிரிந்திருக்கும் ஒவ்வொரு நொடியும்
உலகம் மெல்ல உருளுவதாய்
தோன்றுகிறது எனக்கு
ஒவ்வொரு நாளையும் நகர்த்துவது
பெரும் போராட்டமாய் இருக்கிறது
நிலைமை மோசமாகிகொண்டிருக்க
நீயோ வேடிக்கை பார்த்துகொண்டிருக்கிறாய்

Saturday, 7 November 2009

காதல்


கண்ணுக்கு தெரியா
மாயக்கைறென நம்மை
பிணைத்திருக்கிறது காதல்
என் விழிகளை நோக்காமல்
கவிழ்ந்திருக்கும் உன் இமைகளின் ஓரம்
கசியும்  அன்பை
எண்ணி எண்ணி  உள்ளம்
தவித்திருக்கிறேன்
காலம் நம்மை  தூரங்களில் வைத்தாலும்
காதல் வளர்ந்துகொண்டுதனிருக்கிறது
நானும் நீயும்
பொழியும்  அன்பில்

Thursday, 22 October 2009

கடிதம்


தினமும்
உனக்காக  ஏதேனும்
எழுத நினைக்கயில்
வார்த்தைகள் கிடைக்கவில்லை எனக்கு
உன்னை நினைக்கயில்
வேறெதையும்
நினைக்க மறுக்கிறது மனசு
நாளை முயற்சி செய்கிறேன்
உன்னைப்பற்றி எழுத

பயணம்


இரயில்  பயணங்களில்
எத்தனை முயன்றும்
தவிர்க்க முடியவில்லை
உறுத்தும்
தனிமையும்
உன் நினைவையும்
கடிகாரம்
மிக மெல்ல நகர்வதாய்
தோன்றுகிறது எனக்கு
மனம் வேகமாய்
மிக வேகமாய்
ஓடி வருகிறது  புகைவண்டி முன்னால்
உன்னை பார்க்கும்
நொடியை எண்ணி
நொடிகளை எண்ணிக்கொண்டிருக்கிறேன்

Sunday, 18 October 2009

தூரம்

ஒவ்வொரு முறை
 உனை பார்க்கும்போதும்
உன்னை சிறை பிடிக்க  துடிக்கிறது
மனசு
ஐம்புலன்களும்
உன்னில் சங்கமிக்க  தவிக்கின்றன
உன்னை தொட கைகள் நீட்டும் வேளையில்  தான்
மனதில் உறைக்கிறது
உனக்கும் எனக்கும்
பல ஓளி ஆண்டுகள்  தூரமென்பது !

பேரழகி


கவிதைக்கு  பொய்  அழகாம்
நான் கவிஞன் இல்லை
பொய் சொல்லவும் தெரியவில்லை
உண்மையை  சொல்வதானால்
ஒரு வரியில் சொல்வதானால்
என் உலகத்தின்
பேரழகி நீ!

Thursday, 15 October 2009

பயம்

எனக்கு பயமாய் இருக்கிறது
உன் நினைவுகள் என்னுள் பெருகிவருகின்றன
மழைக்கால ஈசலாய்
ஓவ்வொருநாளும் 
கண் விழித்திடுகையில்
கடவுளைவிட 
நீதான் நினைவுக்கு வருகிறாய்
காலை மலர்களை கண்ணுருகையில்
நெஞ்சுக்குள் நிறைகிறாய் நீ
கதைகளை  கவிதைகளை
ரசிக்கையில் - ஏனோ
உன் நினைவுகள்  என்னை நிரப்புகின்றன
அந்தி சூரியனின் ஆனந்தத்தில்
உன் அபிநயங்கள் எந்தன் உள்ளத்தில்
கண் மூடும்போதும்
கனவுகளில் உயிர்த்திருக்கிறாய் நீ
கொஞ்சம் கொஞ்சமாய் 
தொலைந்து கொண்டிருக்கிறேன்  நான்
உன்னுள்
பயமாய் இருக்கிறது எனக்கு!!
 

Wednesday, 14 October 2009

மறதி

இன்று 
எப்படியாவது  சொல்லிவிடவேண்டும் 
தினமும் கண்ணாடியில் 
பிம்பம் பார்த்து 
தைரியப்படுத்தி கொள்கிறேன் என்னை 
உன்னிடம் 
பேச நினைக்கும் 
வார்த்தைகளை  வாக்கியப்படுத்துகிறேன் 
பயணிக்கும் எறும்பு கூட்டம் போல 
நிழல்களிடம்  பேசி ஒத்திகை பார்க்கின்றேன் 
ஆனால் 
உன்னை பார்த்த 
மகிழ்ச்சியில்  என்னென்னவோ
உன்னிடம் பேசி சிரித்து 
மணிக்கணக்கில்  ஆனபின்   
நாளை பார்க்கலாம்  - என 
இருவரும் விடைபெற்றபின்  தான் 
நினைவுக்கு வருகிறது 
நான் 
உன்னிடம் சொல்லவந்ததை  
சொல்ல மறந்தது !