contact

Monday 20 December 2010

தண்டனை

யுகம் யுகமாய்
காத்திருந்தேன்
சுழலும் வாழ்க்கை சக்கரத்தில்
சுழலா அச்சாணியாய்  தேய்ந்திருந்தேன்
உன்னில் கரைந்துவிடவா?
உலகையே துச்சமாக நினைக்கும்  உள்ளம்
உன் கடைக்கண்  பார்வையில்
கடமை மறக்குதடி
யாருக்கும் அடங்கா காளையின்
மூக்கணாங்கயிறாயிருக்கிறாய்  நீ எனக்கு
சந்தோசங்களுக்கு குறைவில்லை என்றாலும்
அருகில் நீ இல்லையடி  சினேகிதி
கல்நெஞ்சம் காலத்திற்கா உனக்கா?
 எதாகிலும் தனிமை தண்டனை எனக்கா?

Wednesday 18 August 2010

நாம் தமிழர்களா?

தமிழுக்கு அமுதென்று பேர்
அந்த தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
என்றான் ஒரு கவி
யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல்
இனிதாவது ஒன்றுமில்லை
என்றான் ஒரு கவி
எல்லாம் பழங்கதையாகி போனது
ஊரெங்கும் உலகத்தமிழ் செம்மொழி மாநாடுகள்
உண்மையில்
கன்னி தமிழ்
கற்பிழந்து விட்டது  பிற மொழி கலந்து
பேசும் இரண்டு மூன்று
வாக்கியங்களுக்குள்
நான்கைந்து பிறமொழி சொற்கள்
ஆரம்பம் முதலே ஆங்கில கல்வியாம்!
தமிழ் எழுத படிக்க தெரியாத
தமிழ்நாட்டு குழந்தைகள்
வரிவடிவமில்லா மொழிகளெல்லாம்
வாழ்விழந்து போனதை அறிந்திருந்தும்
தமிங்கிலிஷ் குறுந்தகவல்கள்
தமிழ் பேசினால் மட்டும்
நாம் தமிழர்களா?

Sunday 16 May 2010

ஒரு நொடியில்

உன்னை பார்த்த
மகிழ்ச்சியில்
மெல்ல நிரம்பி வழிகிறது உள்ளம்
தருணங்கள் சில
வாழ்கையே மாற்றிவிடுகின்றன
எதிலும் ஒரு துள்ளல்
என்னுதடுகள் ஏதோ ஒரு பாடலை
முணுமுணுக்க
உன்னிடம் கண்ட புன்னகை
ஒட்டி இருக்கிறது என் முகத்தில்
காட்சிகளின்  வண்ணங்கள் மாறிவிட்டன
ஒரு நொடியில்
எவ்வளவு வசீகரம்
உன்னிடம்!




Sunday 17 January 2010

மௌன போராட்டம்


அதிகாலை பனியில்
குளித்திடும்
அழகான மலர்போல்
எதிர்படுகையில்
உன் ஆடை அலங்காரத்தை
நி அணிந்திருக்கும் புன்னகையை
மருண்ட மான்
விழிகளில் தெரியும்
உற்சாகத்தை
பாராட்டதான் ஆசை  எனக்கு
ஆனால்
அரை நிமிடம் நின்று
பேசினால் கூட
நீல கண்ணாடி போட்டு
நம்மை காணுமோ
இந்த உலகம் என சிந்தையில்
வினா எழ
வாய் வரை வந்த வார்த்தைகள்
தொண்டைகுழியில் சிறை வைக்கப்படுகின்றன
வார்த்தைகளின் போராட்டம்
கண்களில் மௌனமாக!

Wednesday 6 January 2010

காத்தாடி





நூலறுந்த
காத்தாடியாய் ஆகிப்போனேன்
காற்றடிக்கும் திசையெங்கும்
அலைந்துகொண்டிருக்கிறேன்
பிடித்து நிறுத்துவார் யாருமின்றி
விழுந்துவிட  விருப்பமில்லை
வாழ்ந்திடவும்  பெரிய திட்டமில்லை

Sunday 20 December 2009

பொய் கோபம்



எல்லோர் கேள்விகளுக்கும்
பதிலளிக்கும் நான்
பதிலிருந்தும் மௌனிக்கிறேன்
உன்னிடம் மட்டும்
எல்லாம் தெரிந்திருந்தும்
ஏனோ
தினமும் கேட்கிறாய் "ஏன் தாமதம்?"
ஒவ்வொரு நாள் முன்னிரவு நேரங்களில்
இப்படித்தான் ஆகின்றது
என் மேல் உன் அக்கறையின் 
வெளிப்பாடாய் உன் பொய் கோபம்
என்னை ஊமையாக்குது!

Tuesday 1 December 2009

அடங்காமலே மனம்


அடங்காமலே மனம்
அடாவடி செய்யுதடி
அருகில் நீ இல்லையென அறிந்திருந்தும்
பார்க்கும் பெண்களில்
பாவை உன்னை தேடுதடி
பகலிரவை மறந்து
பழைய நினைவுகளில் முழ்குதடி
என்னதான் செய்தாலும்
என் பேச்சை கேட்க மறுக்குதடி
நான் சொல்வதை செய்ய சொல்லி
நீயாவது சொல்லடி
என் மனதிடம்